திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மங்கா மற்றும் மங்காத்தா


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆனால்
வேலைக்காரி அமைவது  யார் கொடுக்கும் வரம்??  சொல்வீர்களா?

கவிஞர்களும்,கவிதைப் பிரியர்களும், தவளைகளை அடுத்து வாயால் கெடும் ரகம். எனக்கு  திருமணமான புதிதில் புதுமனைவியை அசத்த, நான் படித்து ரசித்த கவிதைகளை சொல்லிய என்  மேதா விலாசத்தில் இருந்த வில்லங்கத்தை நான் உணரவில்லை. ஒருநாள், வேலைக்காரியை பற்றிய ஒரு ஆச்சரியமான  கவிதை (கணையாழியில் படித்ததாய் நினைவு.)
அவளுக்கு சொன்னேன்.

அழகான வேலைக்காரி..
குனிந்து பெருக்க
வீடு சுத்தமாச்சு,,
மனசு குப்பையாச்சு..

பிடித்தது சனி.....அன்றைக்கு.  இன்று வரை, என்  மனைவியின் வேலைக்காரி ரெக்ரூட்மண்ட் பாலிசி  மாறிப் போனது.
முதல் தகுதியே வேலைக்காரி கிழவியாய் இருக்க வேண்டும்.!
மணிரத்தினத்தின்  ரோஜாவில் வருவது போல் எத்தனை கிழவிகள் கும்மியடித்திருக்கிறார்கள் என் வீட்டில்?

இப்போ சொல்ல வந்தது   ஏதோ மனசு-குப்பை விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். கவிதை நெய்யும் மனதில் களங்கம் இருக்குமா  நண்பரே ?

தற்போது நான் வசிக்கும் தெலுங்கும் உருதுவும் கூறும் நல்லுலகான      ஹைதராபாதில், எங்கள் வீட்டு வேலைக்காக வரும் தாயும் மகளும் தான் இன்றைய என்  தலைப்புச் செய்தி !
இருவரும் சேர்ந்தே  வருவார்கள். பதினெட்டு வயது மகளின் நாமகரணம் மங்கா. தாயாரின் பெயர் தெரியாததாலும் அவள் மங்காவின் ஆத்தா ஆதலாலும் மங்காத்தா என அறிக.... ..அவர்களிருவரும் வேலை தொடங்குவதைப் பார்த்தால் WWF ஜோடி குஸ்தி வீரர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு களமிறங்கி எதிரிகளை துவம்சம் செய்ய வீடு கட்டுவது போல் இருக்கும்.. அத்தனை சுருக்கு!

இருவர் வேலையும் நறுவிசாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
 கை சுத்தம் ரொம்பவே. பின்னே பிரச்னை என்ன என்கிறீர்களா?

எங்கள் மங்காவின் கோரிக்கைப் பட்டியல் தினமும் நீண்டு கொண்டே போகும்..

அந்த ரூமில் மடக்குக் கட்டிலை சாய்த்தே தானே வைத்திருக்கிறீர்கள்? நானாவது உபயோகிப்பேன்..தரீங்களா?

ஒவ்வொரு ரூமிலும் சுவர்க் கடிகாரம் இருக்கு. அதில் ரெண்டு பாட்டரி போடாமல் நின்று போய் விட்டது.. எனக்கு அதில் ஒன்றைக் கொடுங்களேன்

அக்கா, நீங்கள் இருப்பது ரெண்டே பேர்... அண்ணன்களும் வெளியூரில் இருக்காங்க.(அக்கா என்  மனைவி. அண்ணன்மார்களோ என்  பிள்ளைகள்!) பின்ன எதுக்கு மூணு குக்கர் ? எங்களுக்கு ஒண்ணு தரலாமில்லே?

இதுதான் என்றில்லை... கேட்பது அவள் கடமை போல் கேட்பதும்,
மறுப்பு சொல்ல வார்த்தை தேடும் மனைவியின் சங்கடமும் வாரத்தில் இரண்டு நாளாவது என்  காதுக்கு வரும். தாயார்க்காரியோ, சின்ன பொண்ணு தான் ஆசைபடுது.. குடுத்து தான் விடேன் என்னும் மத்தியஸ்த நிலையெடுத்து வழிமொழிவாள்.

புடவை, நைட்டி, சோப்பு,கிரீம் இத்யாதிகளை அவ்வப்போது ஆறுதல் பரிசாக என் சிறந்த பாதி( பின்னே BETTER HALFஐ எப்படி சொல்வதாம்?) தந்தாலும் ரோதனை என்னவோ தொடர் கதை தான்.

இன்று காலை, ஞாயிற்றுக்கிழமைக்கேயான சோம்பலுடன் படுக்கையில் நான்.. அடுக்களையில் மனைவி.... அடுத்த கோரிக்கையுடன் மங்கா.....
அக்கா! என் வெயிட்டே குறையலக்கா ?

தினம் ஸ்கிப்பிங் ஆடு.

எங்க வீட்டில் கூரை ரொம்ப கம்மி உயரத்தில்.. அது
முடியாதுக்கா.

அப்போ சாப்பாட்டை குறை. சாயங்காலம் வாக்கிங் போ

ஏது எனக்கு நேரம்? அதுவும் இந்த ஹைதராபாத் டிராபிக்குல

அதுக்கு என்னதான் பண்ணலாம்? இது என் மனைவியின் சலிப்பு.

அக்கா! நானும் வந்த நாள் முதலா பாக்குறேன் அந்த ட்ரெட்மில் மேல அய்யாவோட பேண்ட்டும், வேட்டியும் தான் தொங்குது.
நான் வேணா தினமும் அதுல அரை மணி நடக்கட்டுமா?
ஈ டி.வி விளம்பரத்துல பொண்ணுங்க இதுல நடந்து ஒல்லியா  ஆகுறத காட்டுராங்க அக்கா

இன்று என்னவளின் பொறுமை எல்லை  கடந்து விட்டது போலும்.
ஏண்டி.. அத உபயோகப்படுத்தல இத உபயோகபடுத்தல குடு குடுன்னா எப்பிடி.. உங்க அய்யாவால கூடத்தான் இங்க ஒரு உபயோகமும் இல்ல.. ஒரு வேலையும் வீட்டுல செய்யமாட்டரு.
அப்போ ஒங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போயிடேன்?.

மங்கா விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.. அவங்கள கூட்டிகிட்டு போய் என்ன செய்யிறது. எப்ப பாரு எதாவது படிக்கிறாங்க.. இல்லன்ன சின்ன டி வில (என் லேப் டாப் தான் அது) ஏதோ கொடஞ்சுக்கிட்டு இருப்பாங்க.. கரண்ட்டு தான் வேஸ்ட்டு.

மேற்கொண்டு அவர்கள் சம்பாஷனையில் என் மனம் ஈடு பட வில்லை.


எனக்கு குக்கருக்கு இருக்கும் மதிப்பு கூட இல்லையா?
என்னைத்  தூக்கி குடுக்கறேன்னு சொன்ன என் தர்மபத்தினி பெட்ரூமில் நுழைய, ஏதும் காதில் விழாததுபோல் என்
அறிதுயில் நீடிக்க...

இந்தப் பதிவை என் லேட்டா எழுதினேன்னு பாக்குறீங்களா?
பின்னே..  இன்னிக்கு ஒரு மணி நேரம் இல்ல ட்ரெட்மில்லில்
நடந்தேன்!!

சின்ன வயதில் சாப்பிடலேன்னா பூச்சாண்டிகிட்ட புடிச்சி
 குடுத்துடுவேன் என்ற என் அம்மாவின் பயமுறுத்தல் நினைவுக்கு வந்தது..

நான் வேல ஒண்ணும் செய்யறதில்லயாமே? ஒருவேளை என்னை...

அம்மாடி! ஏதும் காய் நறுக்கணுமா?

அதிசயமாய் என்னைப் பார்த்தவள் சொன்னாள். சமையலே முடிஞ்சிடுச்சு..சாப்புடுறீங்களா?

உம்’                                                                            

பரிமாறியவாறே சொன்னாள்.. இன்னிக்கு மங்கா என்ன கேட்டா தெரியுமா?

அவ பாவம் சின்ன பொண்ணு. அப்பிடித்தான் ஏதாவது கேட்பா... உன்னால முடிஞ்சா குடு. இல்லன்னா விடு..  இப்போ  எனக்கு கொஞ்சம் ரசத்தைப் ஊத்து .....

(நான் மேலே குறிப்பிட்ட கவிதையை எழுதிய மகானுபாவன் யார் என யாராவது சொன்னால் தக்க சன்மானமாய் ஒரு வாழ்த்துப்பா அவர்மேல் பதிவிடப் படும்.. ஹய்யோ ஹைய்யோ!)

  

6 comments:

ப.கந்தசாமி சொன்னது…

ஆமா, தெரியாமத்தான் கேட்கிறேன், better half சொன்னதிலே என்ன தப்பு?

மோகன்ஜி சொன்னது…

கவுத்துட்டீங்களே சார்!

Unknown சொன்னது…

நானும் அந்த கவிதை படிச்சிருக்கேன். ஆனா பாக்யாவிலன்னு நினைக்கிறேன். எழுதினது யார இருந்தா என்ன, நடக்க வேண்டியது நடந்தா சரி....

மோகன்ஜி சொன்னது…

அப்பிடி போடுங்க அருவாள !

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமையா எழுதி இருக்கீங்க சார்...!!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சகோதரர் காதர்,எங்கெங்கோ வாழும் அன்பு நெஞ்சங்களை எனக்களித்த வலைப்பூவுக்கு வணக்கங்கள்